சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகள் குடித்த இருமல் மருந்து கோல்ட்ரிப் என்கிற இருமல் மருந்தாகும். அந்த குழந்தைகள் குடித்த கோல்ட்ரிப் இருமல் மருந்தின் தயாரிப்பு ஆலை தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் உள்ளது. அந்த தயாரிப்பு ஆலையின் பெயர் ஶ்ரீசன் ஃபார்மா. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் ஆவார்.
குழந்தைகள் பலியானதை தொடர்ந்து இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அந்த தயாரிப்பு நிறுவனமும் மூடப்பட்டதை தொடர்ந்து மேலும் இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று நடத்தப்பட்ட ED ரைடில் ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனத்தின் உரிமையாளரான ரங்கநாதனுக்கு சொந்தமான 2.04 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் ரங்கநாதனுக்கு தொடர்புடைய சென்னை கோடம்பாக்கம் வீடு மற்றும் இரண்டு குடியிருப்புகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.
இருமல் மருந்தில் சிறுநீரகத்தை பாதிக்கும் நச்சுப்பொருள் இருப்பது உறுதியாகி உள்ளது. மருந்து தயாரிப்பின் மூலப் பொருட்கள் முறையான பரிசோதனை இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. உற்பத்தி செலவை குறைப்பதற்காக லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்திற்காக இந்த நிறுவனம் இயங்கி வந்ததும் தெள்ளத்தெளிவாக விசாரணையில் தெரிவந்துள்ளது.
நாம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் நாம் எடுத்துக் கொள்ளும் மருந்து பொருட்கள் மருத்துவரின் ஆலோசனையின் கீழ் எடுத்துக் கொள்வதுதான் நல்லது. மெடிக்கல் ஸ்டோர்களில் சென்று மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாமாக ஏதேனும் மருந்து பொருள் வாங்குவதை இனி தவிர்ப்போம்.
