தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டை நெருங்கும் நிலையில், கட்சிக்குள் புதிய அதிகாரப் போட்டி தலைதூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மாவட்டச் செயலாளர் பதவிகளை கைப்பற்றுவதற்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் புதிதாக கட்சியில் இணைந்துள்ள மூத்த தலைவர்கள் மத்தியில் முட்டல் மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டபோது, பல மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தில் நீண்டகாலமாக செயல்பட்டவர்களே மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். கட்சி உருவாக்கம், உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் அவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். ஆனால் சட்டமன்றத் தேர்தலின்போது, மாவட்டச் செயலாளர் பதவியில் இல்லாத பலருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களில் பலர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாகவும், சிலர் அமைச்சர்களாகவும் உயர்ந்தனர்.

இதன் பின்னர், “தேர்தலில் வெற்றி பெற்ற நாங்களே மாவட்டத்தின் அரசியல் முகம்” என்ற அடிப்படையில் மாவட்டச் செயலாளர் பதவியையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என தவெகவில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டி ஏன் ?
தமிழக அரசியலில் மாவட்டச் செயலாளர் பதவி என்பது சாதாரண நிர்வாகப் பொறுப்பு அல்ல. கட்சியின் அமைப்பு, உறுப்பினர் சேர்க்கை, உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் தேர்வு, கட்சி நிதி, மாவட்ட அளவிலான அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிகார மையமாக அது கருதப்படுகிறது.
அதனால் அமைச்சராக இருந்தாலும், எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தால் மட்டுமே மாவட்ட அரசியலில் முழுமையான செல்வாக்கை செலுத்த முடியும் என்பது பலரின் கணக்காக உள்ளது.
அதிமுக, திமுகவில் இருந்து வரும் தலைவர்கள்
கடந்த சில மாதங்களாக அதிமுக., திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

குறிப்பாக அதிமுகவில் அதிருப்தியில் இருந்த சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் மட்டத்திலான தலைவர்கள், தமிழக வெற்றிக்கழகத்தை எதிர்கால அரசியல் தளமாக பார்க்கத் தொடங்கியுள்ளனர். இவர்களில் பலர் கட்சியில் சேரும்போதே மாவட்ட அல்லது மண்டல அளவிலான பொறுப்புகளை எதிர்பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
மனக் கசப்பில் மக்கள் இயக்க நிர்வாகிகள்
இதுவே பழைய நிர்வாகிகளுக்கும் புதியவர்களுக்கும் இடையே போட்டியை உருவாக்கியுள்ளது. இந்த சூழல், விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் வழியாக பணியாற்றிய நிர்வாகிகள் மத்தியில் மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
“கட்சித் தொடங்கிய நாளிலிருந்து நாங்கள் உழைத்தோம். ஆனால் தேர்தலுக்குப் பிறகு வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுகின்றன” என்ற ஆதங்கம் அடிமட்ட நிர்வாகிகள் நிலவுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியலில் இதேபோன்ற சூழல் முன்பு திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகளிலும் ஏற்பட்டுள்ளது. அதிகாரத்திற்கு வந்த பிறகு பழைய நிர்வாகிகளுக்கும் புதிய அரசியல் முகங்களுக்கும் இடையே பதவிப் போட்டி உருவாகுவது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

விஜய் தலைமைக்கு சவால்
அண்மையில் நடைபெற்ற தவெக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்து பொதுச் செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியதாக கூறப்படுகிறது.
ஒருபுறம் தேர்தல் வெற்றியை பெற்றுத் தந்த எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களின் எதிர்பார்ப்புகள்; மறுபுறம் கட்சியின் அடித்தளத்தை உருவாக்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் கோரிக்கைகள்; இன்னொரு புறம் புதியதாக இணையும் மூத்த அரசியல்வாதிகளின் ஆசைகள் என மூன்று தரப்புகளையும் சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழக வெற்றிக்கழகத் தலைமை உள்ளது.
இத்தகைய சூழலில் தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தீர்மானிப்பது தேர்தல் வெற்றி மட்டும் அல்ல; பதவி பங்கீட்டை கட்சித் தலைமை எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். மாவட்டச் செயலாளர் நியமனங்களில் சமநிலை தவறினால் அதிருப்தி அதிகரிக்கும். அதே நேரத்தில் அனைவரையும் திருப்திப்படுத்துவது அரசியல் ரீதியாக சாத்தியமற்ற காரியமும் கூட.
எனவே, “வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வது, வெற்றிப் பெறுவதைவிட கடினம்” என்கிற அரசியல் உண்மையை தற்போது தமிழக வெற்றிக்கழகத் தலைமை நேரடியாக எதிர்கொண்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
– பா. முகிலன்
