நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். புதிய விவசாயி சின்னத்தில் கரும்பு மாற்றி ஏர் கலப்பை இடம்பெற்றுள்ளது.

நாம் தமிழர் இயக்கம் 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றப்பட்டு, சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த கால தேர்தல்களில் தோல்வியை சந்தித்தாலும், வாக்கு சதவீதம் ஒவ்வொரு முறையும் அதிகரித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்த நாம் தமிழர், சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி அல்லது மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களை பெற வேண்டும் எனும் விதிப்படி அங்கீகரிக்கப்படவில்லை. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 6.58 சதவீத வாக்குகளை பெற்றதால், அங்கீகாரம் கிடைக்காமல், கரும்பு விவசாயி சின்னம் பறிபோயின. மக்களவைத் தேர்தலில் கேட்ட சின்னம் கிடைக்காமல், ‘மைக்’ சின்னம் வழங்கப்பட்டது.

கடந்த மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி அந்தஸ்து பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு, கடந்த ஜனவரி மாதம் மாநில கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனால், விவசாயி அல்லது புலி சின்னம் ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த சின்னம் வேறு மாநில கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், மாற்றங்கள் செய்யப்பட்ட விவசாயி சின்னம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதையடுத்து, நாம் தமிழர் கட்சி ஏற்கெனவே உள்ள கரும்பு விவசாயி சின்னத்தில் மாற்றம் செய்து, ஏர் கலப்பையுடன் விவசாயி சின்னம் வடிவமைத்து தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டது. ஏர் கலப்பை விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் மே 10-ம் தேதி அறிவித்ததாக சீமான் தெரிவித்தார். விவசாயி சின்னம் மீண்டும் கிடைத்ததால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version