45 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் வசந்த உற்சவத்தில் இசைக்கப்பட்ட தங்க நாதஸ்வரம். திரளான பக்தர்கள் மெய் சிலிர்த்து நாதஸ்வர இசையுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானது நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில். இத்திருக்கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும். இத்திருகோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் வசந்த உற்சவம் வெகு விமர்சையான விழாவாகவும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின் 17 நாட்கள் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி வசந்த உற்சவம் நடைபெறும் இந்த உற்சவத்தின் போது சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் எழுந்தருளும் மண்டபம் வெட்டிவேர்களால் அலங்கரிக்கப்பட்டு குளிர்ச்சியூட்டக்கூடிய அனைத்து வகையான பொருட்களும் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவ திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது.சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் நீர் நிரப்பப்பட்ட வசந்த மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.கோடை காலத்தில் வெப்பம் தனியும் வகையில் பிரார்த்தனை செய்யப்பட்டு வெள்ளரிக்காய்,பானகம் உள்ளிட்ட பொருட்கள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.வசந்த உற்சவத்தின் எட்டாம் திருநாளான இன்று காலை சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு வசந்த மண்டபத்தில் வைத்து சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது தொடர்ந்து வசந்த மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஏழு முறை வளம் வந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.முதல் சுற்றின் போது மல்லாரி இசையும் இரண்டாவது சுற்றில் திருமுறை பாராயணம் மூன்றாவது சுற்றில் வேதபாராயணம் நான்காவது சுற்றில் ருத்ர ஜபம் ஆகியவை செய்யப்பட்டது. ஐந்தாவது சுற்றில் தங்கநாதசுரம் இசைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
கடந்த 45 ஆண்டுகளாக நாதஸ்வரம் பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தங்க நாதஸ்வரம் வசந்த உற்சவத்தின் போது இசைக்கப்படாமல் இருந்தது பின்னர் நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்தின் மூலம் பாரம்பரிய பூஜைகள் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் 45 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தங்க நாதஸ்வரம் நெல்லைப்பர் கோவில் வசந்த உற்சவத்தில் இசைக்கப்பட்டது. கோவில் நாதஸ்வர கலைஞர் சரவணன் மற்றும் இசை கலைஞர்கள் மூலம் இந்த ஆண்டு தங்க நாதஸ்வரம் வசந்த உற்சவத்தின் ஐந்தாவது சுற்றில் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து தங்க நாதஸ்வரத்தில் தியாகராஜர் கீர்த்தனைகள் வாசிக்கப்பட்டு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வசந்த மண்டபத்தில் வளம் வந்த நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் மெய்சிலிர்க்க கண்டு தரிசனம் செய்தனர்.