மத்திய கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலை தெற்கு கொங்கன் மற்றும் கோவா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பரப்புகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையுடன் தொடங்கிய கத்தரி வெயில், தற்போது சுட்டெரிக்கும் வெப்பமாக மாறியுள்ளது. கடந்த மே 16 முதல் லேசான மழை தொடர்ச்சியாக பெய்து வந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பதிவாகி வெப்ப நிலை சற்று குறைந்துள்ளது.

இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை பொதுவாக மே 27-ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அது சில நாட்கள் முன்னதாகவே – அதாவது மே 25-க்குள் தொடங்கும் சாத்தியம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடக்கத்தில் இது கேரளா மாநிலத்தில் ஆரம்பித்து பின்னர் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு பரவும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு ஆந்திரா, வடதமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கூறப்படுகிறது.

இந்த பருவமழையின் தொடக்கத்தால் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில், குறிப்பாக நீலகிரி, வால்பாறை, கூடலூர், கோவை மற்றும் கன்னியாகுமரியில் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சில இடங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், சுற்றுலா பயணிகள் அவதானமாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version