காளையார்கோவில் அருகேயுள்ள மாரந்தை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த திருவாசகம் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்ட வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருவாசகம் தாக்கல் செய்த மனுவில், 2021 உள்ளாட்சித் தேர்தலில் மாரந்தை ஊராட்சி மன்றத் தலைவராக தான் வெற்றி பெற்றதாகவும், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வரதராஜன் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தத் தோல்வி காரணமாக, வரதராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை மற்றும் தனது குடும்பத்தினரை பலமுறை தாக்கியதாகவும், இது குறித்து காளையார்கோவில் காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த மே மாதம் மீண்டும் தாக்குதல் நடந்ததாகவும், அப்போதும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் திருவாசகம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது உயிருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் கூறி, வழக்கை சிபிசிபிசிஐடிக்கு மாற்றுமாறு கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, “மனுதாரர் ஒரு பஞ்சாயத்துத் தலைவர். பஞ்சாயத்துத் தலைவரின் புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது நிர்வாகத்தின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. மனுதாரர் சுமத்திய குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டு, பொருத்தமான தீர்வு காண வேண்டியது அவசியம்” என்று கூறி, மாரந்தை கிராம ஊராட்சித் தலைவராக இருந்த திருவாசகம் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.