தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தாங்கள் வெளியேறவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவில் தந்தை மகன் இடையேயான மோதலை அடுத்து ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இருவரும் பாமகவை சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் மாறி மாறி நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதுமாக அதிரடி காட்டி வருகின்றனர். ஆனால் தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராகவும் கட்சியின், சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவை அவருக்குத்தான் சொந்தம் என அங்கீகரித்துள்ளது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் ராமதாஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
இருப்பினும், இவருக்கிடையே உள்ள பிரச்சனையை தீர்த்து என்.டி.ஏ. கூட்டணியில் பாமகவை இழுக்கவேண்டும் என்று பாஜக முயற்சித்து வருகிறது. அதனடிப்படையில் இருவரிடமும் பேச்சுவார்த்தைகளும் நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அன்புமணி, கூட்டணி , தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்கப்பட்டதாகவும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்று அமித்ஷாவிடம் தெரிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க, பாமகவை திமுக கூட்டணிக்கு இழுக்கவும் ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் புதிய தகவல் ஒன்றை சொல்லியுள்ளார். என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து தாங்கள் வெளியேறவில்லை, அதே நேரத்தில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசிய விவகாரத்தை நேரடியாக மறுக்கவில்லை என்றும் இருப்பினும், தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என்று சூசகமாக ராமதாஸ் கூறியுள்ளார். இதன் மூலம் அன்புமணியை போலவே, ராமதாஸும் என் டி ஏ கூட்டணிக்கு ஆதரவளிக்க போகிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
