ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட உள்ளதாக கடந்த மாதம் அறிவித்த டிடிவி தினகரன் திடீரென தான் தேர்தலில் போட்டியிடவில்லை என விலகியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த டிச.24ம் தேதி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், எந்தக் கூட்டணி அமைந்தாலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்தான் போட்டியிடுவார்” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருந்த டிடிவி, தற்போது அவர்கள் கூட்டணியிலேயே இணைந்துவிட்டார். இந்தநிலையில் திடீர் டுவிஸ்ட்டாக தான் தேர்தலில் போட்டியிடவில்லை என விலகியுள்ளார். தனியார் டிவிக்கு அளித்த நேர்காணலில் இதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இதுகுறித்து விசாரித்தப்போது வரும் தேர்தலில் ஆண்டிப்பட்டியில் தனது மனைவி அனுராதாவை களமிறக்க டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024 மக்களவை தேர்தலில் களமிறங்கிய டிடிவி தினகரனுக்கு அனுராதா தீவிர பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
