கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் , டவர் கட்டுமான பணியின் போது லிப்ட் கேபிள் அறுந்து விபத்துக்குள்ளானதில், சேலத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

சென்னை கத்திட்ரல் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் டவர் அமைக்கும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில், நேற்று மாலை, கட்டுமானப் பொருட்களை மேலே எடுத்துச் செல்லும் தற்காலிக லிப்டில், பொருட்களுடன் ஐந்து தொழிலாளர்களும் மேலே சென்றள்ளனர். அப்போது திடீரென லிப்ட் கேபிள் அறுந்து விழுந்தது. இதனால் சுமார் 20 அடி உயரத்திலிருந்து தொழிலாளர்கள் கீழே விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த விபத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் (48), கணேசன் (51), மோகன் (38), மகேந்திரன் (48), சம்பத்குமார் (47) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் மூவருக்கு கால் மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்த அனைவரும் உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version