சன் குழும நிறுவனர் கலாநிதி மாறன், அந்நிறுவன பங்குகளை முறைகேடாக தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக, அவரது சகோதரர் தயாநிதிமாறன் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில், முரசொலி மாறன் உடல்நிலை சரியில்லாதபோது, சட்டவிரோதமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பங்குகளை மாற்றியதாகவும், இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என்றும் தயாநிதி மாறன் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வாரத்திற்குள் பங்குகளைத் திருப்பித் தராவிட்டால், சம்பந்தப்பட்ட மத்திய துறைகளிடம் புகார் அளித்து சன் குழும வணிகங்களை நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும், சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று தயாநிதி மாறன் எச்சரித்துள்ளார். கலாநிதி மாறன், அவரது மனைவி உட்பட 8 பேருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டால், சன் டிவி நிறுவன பங்குகள் வீழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சன் டிவி நிறுவனம் மும்பை பகுங்கு சந்தைக்கு விளக்கமளித்துள்ளது. அதில், தயாநிதி மாறன் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என கூறியுள்ளது. மேலும், 22 ஆண்டுக்கு முன்பு பிரைவேட் லிமிடெட் ஆக இருந்தபோது இந்த பிரச்னை ஏற்பட்டதாகவும், அதற்கும் தற்போதைய நிகழ்வுக்கும் சம்பந்தமில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், வழக்கமாக கோபாலபுரம் குடும்பத்தினர் அவர்களது கூட்டாளிகள் மற்றும் பிரதிநிதிகள் தங்கள் ஊழலை வெளிப்படுத்தியதற்காக என்னை போன்ற சாதாரண மக்களுக்கு சட்ட அறிவிப்புகளை அனுப்புவார்கள். இம்முறை கோபாலபுரம் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தால் நடத்தப்படும் நிறுவனத்தில் நடந்த மிகப்பெரிய ஊழலை அம்பலப்படுத்தி, தங்கள் சொந்த ஒருவருக்கு சட்ட அறிவிப்பு அனுப்பியுள்ளனர்.

திமுக மக்களவை உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் தனது சகோதரருக்கு அனுப்பிய சட்ட அறிவிப்பில், குடும்பம் நடத்தும் நிறுவனத்தில் சட்டவிரோதமாக பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் ரூ.3,498.8கோடி அளவுக்கு பணத்தை (இது கோபாலபுரம் குடும்பத்தின் பணம்) மோசடி செய்துள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளில் இந்த பண மோசடி நடவடிக்கையின் மூலம் ரூ.6,381கோடி அளவுக்கு ஈவுத் தொகையை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது வெறும் ஊழல் அல்ல: கோபாலபுரம் குடும்பத்தின் பேராசையின் பொது வெளிப்பாடு. மக்கள் பதில் அளிக்க வேண்டும். சட்டம் செயல்பட வேண்டும் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version