சிவகாசியை சேர்ந்த சமுத்திரவள்ளி, அலமேலு, காளீஸ்வரி, வேலுதாய் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், எங்கள் கணவர்கள் சிவகாசி எட்டக்காபட்டி தனியார் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தனர். இங்கு 2.12.2014-ல் நடைபெற்ற விபத்தில் கணவர்கள் உயிரிழந்தனர். எங்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் அரசுக்கு பரிந்துரை செய்தார். அதில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. எஞ்சிய ரூ.4 லட்சம் இழப்பீடு தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இந்த இழப்பீட்டு தொகை மற்றும் எங்கள் கல்வித்தகுதிக்கு ஏற்பட சத்துணவு மையங்கள் மற்றும் விடுதிகளில் வேலை வாய்ப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, ”வெடி பொருட் சட்டப்படி 15 கிலோ வரை வெடி பொருட்களை பயன்படுத்தும் பட்டாசு ஆலைகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் வழங்கலாம். 15 கிலோ முதல் 500 கிலோ வரை வெடி பொருள் கட்டுப்பாட்டு அலுவலரும், அதற்கு மேல் தலைமை கட்டுப்பாட்டு அலுவலரும் உரிமம் வழங்குவர். சிவகாசியில் 15 கிலோவுக்கு மேல் மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் வழங்கியுள்ளார்.

சிவகாசி பட்டாசு ஆலைகளின் தலைநகரம். நாட்டின் பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதம் சிவகாசியில் நடைபெறுகிறது. சிவகாசி தொழிலாளர்கள் பட்டாசு ஆலைகளை நம்பியேயுள்ளனர். ஆபத்தான வேலை என்றாலும் வேறு வழியில்லாததால் பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்கு செல்கின்றனர்.

சட்டப்படி ஒவ்வொரு பட்டாசு ஆலைகளிலும் 50 தொழிலாளர்களுக்கு ஒரு போர்மேன், பாதுகாப்பு அலுவலர் அல்லது பிஎஸ்சி வேதியியல் படித்த மேற்பார்வையாளர் இருக்கவேண்டும். இந்த விதி பின்பற்றப்படுவதில்லை. போதுமான கல்வித்தகுதி இல்லாதவர்கள் நியமிக்கப்படுகின்றனர். பட்டாசு ஆலை விபத்து வழக்குகளின் விசாரணை இயந்திரத்தனமாக நடைபெறுகிறது. பட்டாசு ஆலை விபத்து வழக்குகளில் விசாரணை நடத்துவதுடன் மீண்டும் விபத்து நடைபெறாமல் இருக்க விபத்துக்கான காரணங்களை கண்டறிய வேண்டும்.

ஆனால் பட்டாசு ஆலை விபத்து வழக்குகளை பார்க்கும் போது வெடி பெருள் நிபுணர்களிடம் அறிக்கை இல்லை. தடயவியல் நிபுணர்களின் அறிக்கை இல்லை. வெடி பொருள் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை மாவட்ட ஆட்சியரும், வெடி பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் பின்பற்றுவதில்லை. இந்த வழக்குகளில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கான இழப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

ஏற்கெனவே ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டிருப்பதால் மீதமுள்ள ரூ.9 லட்சத்தை 8 வாரத்தில் வழங்க வேண்டும். பட்டாசு ஆலைகளில் உரிமம், பாதுகாப்பு அலுவலர் நியமனம், தொடர் ஆய்வு, பாதுகாப்பு பயிற்சி உட்பட வெடி பொருள் சட்டம், தொழிற்சாலை சட்டம் மற்றும் இவ்விரு சட்ட விதிகள் கடுமையாக பின்பற்றப்படுவதை சுகாதாரத்துறையும், தொழிலாளர் பாதுகாப்பு இயக்குனரும் உறுதி செய்ய வேண்டும்.

சிவகாசி உட்பட பட்டாசு ஆலைகள் செயல்படும் இடங்களில் உரிமம் வழங்கும் நடைமுறைகளை நாக்பூர் வெடி பொருள் தலைமை கட்டுப்பாட்டாளர் ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு ஆலை விபத்து வழக்குகள் திறமையாக, தொழில்நுட்பங்களை பின்பற்றி விசாரிக்கப்படுவதை டிஜிபி உறுதி செய்ய வேண்டும்.

பட்டாசு ஆலை விபத்துக்கு ஆலை உரிமையாளர் காரணமாக இருந்தால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி, விதவை ஓய்வூதியம், வீடு உள்ளிட்ட மறுவாழ்வு பணிகளை அமல்படுத்த வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version