கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க முயன்றவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு..

கரூரில், மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த மணிவாசகம் என்பவர், வாங்கல் வெங்கடேஷ் என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு பெண்கள் உட்பட, நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆற்றில் மணல் அள்ளலாம், அதனைத் தடுப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்று, தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது, அனைவருக்கும் நினைவிருக்கும். இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாங்கல் வெங்கடேஷ் என்ற நபர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்று தெரியவருகிறது.

கனிம வளக் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த அரசு அதிகாரிகளை, அவர்கள் அலுவலகத்திலேயே வைத்து வெட்டிக் கொலை செய்ததும் இதே திமுக ஆட்சியில்தான். தற்போது, இன்னொரு கொலை. மணல் கொள்ளையைத் தடுத்தால் கொலை செய்வோம் என்று பொதுமக்களுக்கு விடப்பட்ட நேரடி மிரட்டல் இது.

சட்டத்தைக் குறித்துச் சிறிதும் பயமின்றி, கொலை செய்யும் அளவுக்கு மணல் கொள்ளையர்களின் அராஜகம் அத்துமீறியிருக்கிறது என்றால், அவர்கள் பின்னணியில் கரூர் கேங் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மணிவாசகம் இறப்பிற்கு நீதி வேண்டும். இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள், மணல் கொள்ளையின் பின்னணியில் இருப்பவர்கள் என அனைவரும், சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லையேல், கரூர் பொதுமக்களின் கடும் எதிர்ப்பினை திமுக அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துக் கொள்கிறேன்.

Share.
Leave A Reply

Exit mobile version