தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஜூன் 20) தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு முதல் இணையவழியில் கலந்தாய்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஜூன் 20 முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை மாணவர்கள் www.tngasain என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஜூலை 18 ஆம் தேதி மாணவர் தரவரிசைப் பட்டியல் வெளியாகும். தொடர்ந்து, ஜூலை 21 முதல் 25 ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்கள் விருப்பக் கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும்.
ஜூலை 28 ஆம் தேதி இடஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்பட்டு, மாணவர்கள் அதனை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கல்லூரிகளில் சேரலாம். ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.