பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5ஆம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கை செம்பியம் காவல் துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை என கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொது செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரரும் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய அரசியல் கட்சியினரின் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்து வரும் நிலையில், மாநில காவல்துறை இந்த வழக்கை சுதந்திரமாக விசாரிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கொலையில் தொடர்புடைய ‘சம்போ’ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான முழுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கவில்லை என்பதால் விசாரணையை சிபிஐ’க்கு மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக கூறினார். இதனையடுத்து, மனு குறித்து காவல்துறை பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களை விடுவிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதால் விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமென் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.