புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் வீட்டின் அருகே விளையாட சென்ற சிறுவன் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கருக்காகுறிச்சி கிழக்கு திருமுருகப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜியின் 9 வயது மகன், திருமேனிநாதன் என்கிற கருப்பன்ஜி அங்குள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சனிக்கிழமை அன்று, பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த திருமேனிநாதன் மாலை வீட்டிற்கு பின்னால் விளையாடச் சென்றுள்ளார்.
இரவு நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால், பெற்றோர் அவனைத் தேடியபோது, வீட்டிற்கு எதிரே உள்ள தண்ணீர் இல்லாத குளத்தில் கழுத்தில் காயங்களுடன் சிறுவன் திருமேனிநாதன் சடலமாக கிடந்ததைப் பார்த்து அலறித்துடித்துள்ளனர்.
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வடகாடு போலீசார் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுவனின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
விளையாடச் சென்ற சிறுவன் வீட்டின் அருகிலேயே காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
