தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க இந்திய தேசிய காங்கிரஸ் முன்வந்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழகப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள், அரசியலமைப்பு விழுமியங்களில் நம்பிக்கையுள்ள ஒரு மதச்சார்பற்ற, முற்போக்கு அரசாங்கத்திற்காக தெளிவானத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். மக்களின் இந்தத் தீர்ப்பை மதிப்பதும், அதனைச் செயல்படுத்த உதவுவதும் காங்கிரஸின் அரசியலமைப்பு கடமையாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கையற்ற எந்தவொரு வகுப்புவாத சக்திகளையும் (Communal Forces) கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையை காங்கிரஸ் விதித்துள்ளது.

மேலும், இந்தத் தவெக – காங்கிரஸ் கூட்டணி வெறும் ஆட்சி அமைப்பதோடு மட்டுமல்லாமல், வரும் உள்ளாட்சித் தேர்தல், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல்களிலும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “தந்தை பெரியாரின் சமூக நீதிச் சித்தாந்தம், அண்ணல் அம்பேத்கரின் அரசியலமைப்பு நெறிகள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்திற்குக் கொண்டு வருவதே இந்தக் கூட்டணியின் இலக்கு” என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து, தமிழக மக்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை மதிக்கவும், இளைஞர்களின் கனவுகளை நனவாக்கவும் உறுதிபூண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வு மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமையவுள்ள இந்த புதிய கூட்டணி, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version