தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கான போராட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தருவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் ஒரு மிக முக்கியமான சந்திப்பு நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிள்ளியூர் எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ் குமார் தலைமையில், அக்கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்தனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சந்திப்பின் போது, வருகை தந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு விஜய் சால்வை அணிவித்து மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார்.
இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைய காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்து, அதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தைத் தவெக தலைவர் விஜய்யிடம் எஸ். ராஜேஷ் குமார் வழங்கினார். ஏற்கனவே 108 இடங்களைப் பெற்றுள்ள தவெக-வுக்கு, காங்கிரஸின் இந்த 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்ததன் மூலம் பலம் 113-ஆக உயர்ந்துள்ளது. மதச்சார்பற்ற அரசை அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்டுள்ள இந்த ஆதரவு, இன்று மாலை விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.
