தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ராமசாமி (52) என்பவரை, திமுக நகரச் செயலாளர் பாலமுருகன் ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, பாலமுருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவப் பின்னணி
கடந்த ஜூன் 24 ஆம் தேதி, நகராட்சி வருவாய் ஆய்வாளர் ராமசாமி, நகராட்சி ஆணையாளருடன் வரி வசூல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திமுகவைச் சேர்ந்த தேனி வடக்கு நகரப் பொறுப்பாளரும், அல்லிநகரம் நகராட்சி நகர் மன்றத் தலைவர் ரேணுபிரியாவின் கணவரும், 20வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான பாலமுருகன், ராமசாமியைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, பாரஸ்ட் ரோட்டில் உள்ள திமுக கட்சி அலுவலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.
அங்கு சென்ற ராமசாமியிடம், “பேருந்து நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தை எடுக்கச் சொல்லி தீர்மானம் போட்டு 6 மாதமாகியும் இன்னும் ஏன் எடுக்கவில்லை?” என்று பாலமுருகன் கேட்டுள்ளார். அதற்கு ராமசாமி, “இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், இன்னும் எடுக்கவில்லை. மேலும், நகர் மன்ற துணைத் தலைவர், நகர் மன்றத் தலைவரிடம் நான் பேசிக்கொள்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.
இதைக் கேட்ட பாலமுருகன், ராமசாமியை ஒருமையில், “நீயும் நகராட்சி ஆணையாளரும் நான் சொல்வதைக் கேட்க மாட்டீர்களா? நகராட்சிக்கு நகர மன்றத் தலைவர் நான் தான், என்னுடைய பேச்சைக் கேட்காமல் எவனும் பணியில் இருக்க முடியாது” என்று ஜாதிப் பெயரைச் சொல்லி அருவருப்பான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
வழக்குப் பதிவு மற்றும் அரசியல் தலையீடு
இந்தச் சம்பவம் குறித்து, திமுக நிர்வாகி பாலமுருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, உரிய பாதுகாப்பு வழங்குமாறு ராமசாமி தேனி நகர் காவல் நிலையத்தில் கடந்த 24 ஆம் தேதியே புகார் அளித்துள்ளார்.
ஆனால், பாலமுருகன் திமுக நகரச் செயலாளர் என்பதாலும், நகர்மன்றத் தலைவரின் கணவர் என்பதாலும், காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்யத் தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பாலமுருகன் மீது வழக்குப் பதிவு செய்யக்கூடாது என்று போலீஸாருக்கு அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியானது. இதனால், கடந்த மூன்று நாட்களாக வழக்குப் பதிவு செய்யாமல், போலீஸார் ராமசாமியிடம் புகாரை வாபஸ் பெறுமாறு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் ஊடகங்களிலும் பொதுமக்களிடையேயும் பெரும் விவாதப் பொருளாக மாறியதால், வேறு வழியின்றி தேனி நகர் காவல் நிலையத்தில் பாலமுருகன் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் (SC/ST (Prevention of Atrocities) Act) போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
எதிர்வழக்குக்கான முயற்சி
இதற்கிடையே, இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் விதமாக, ராமசாமி தன்னைத் தாக்கியதாகக் கூறி பாலமுருகனிடமிருந்தும் ஒரு புகார் மனுவைப் பெற்று, ராமசாமி மீதும் வழக்குப் பதிவு செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
