தமிழ்நாட்டில் தவெக தலைமயிலான புதிய அரசு அமைய உள்ள நிலையில் PM ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக  தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசு மீண்டும் கெடு விதித்துள்ளது.

பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா (PM SHRI) என்பது நாடு முழுவதும் உள்ள 14,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தும் திட்டமாகும்.

தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் கீழ், மாணவர்களுக்கு நவீனத் தொழில்நுட்பம், ஆய்வகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய தரமான கல்வியை வழங்குதல் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இத்திட்டத்திற்கான நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்கும்.பெரும்பாலான மாநிலங்கள் இதில் இணைந்துவிட்ட நிலையில், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

தமிழ்நாட்டில் முந்தைய திமுக தலைமையிலான அரசு, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தது.

பிஎம் ஸ்ரீ திட்டம் தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இருப்பதால், அதில் உள்ள மும்மொழிப் பாடத்திட்டம் போன்ற அம்சங்களுக்குத் தமிழக அரசு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கல்வி என்பது மாநிலப் பட்டியலில் வரும் நிலையில், மத்திய அரசின் கொள்கைகளை அப்படியே ஏற்பது மாநில உரிமைகளைப் பாதிக்கும் என்றும்,

ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் ‘சமக்ர சிக்‌ஷா’ போன்ற திட்டங்களுக்கான நிதியை விடுவிக்க மத்திய அரசு பிஎம் ஸ்ரீ ஒப்பந்தத்தைக் கட்டாயமாக்குவதாகத் தமிழக அரசு குற்றம் சாட்டியிருந்தது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், இத்திட்டத்திற்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். மாநிலத்தின் பங்களிப்பு நிதி இருந்தும், திட்டத்தின் பெயரில் ‘பிரதான் மந்திரி’ என்று மத்திய அரசின் முத்திரை இருப்பதை அவர் விமர்சித்துள்ளார். மேலும், இது மாநிலக் கல்வித் திட்டங்களுக்குப் போட்டியாக அமையும் என்றும் அவர் கருதுகிறார்.

இந்த நிலையில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் மத்திய அரசின் ‘பிஎம் ஸ்ரீ’ (PM SHRI) திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

இந்த திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம், மாநில அரசுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு இறுதி நினைவூட்டலாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைய உள்ள நிலையில், மத்திய அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர அழுத்தம் கொடுத்துள்ள நிலையில், விஜய் என்ன செய்யப் போகிறார் என்னும் வினா எழுந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version