‘டிட்வா’ புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் நேற்று (டிச. 1) மாலை வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. சென்னையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் ஒரே இடத்தில், பல மணி நேரமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையமாக நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (டிச. 2) கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ., எண்ணூரில் 26.4 செ.மீ., ஐஸ் அவுஸில் 23.1 செ.மீ, பேசின் பிரிட்ஜ்-ல் 20.7 செ.மீ மழைப் பதிவாகி உள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதன் காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடங்களிலும் இன்று (டிச. 2) கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னையில் நேற்று (டிச. 1) காலை முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தாழ்வான இடங்களில் சூழ்ந்துள்ள மழை நீர் மற்றும் சாலைகளில் விழுந்த மரங்களை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
