தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பதில் காலதாமதம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்” என்ற முழக்கத்துடன் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு த.வெ.க. நிர்வாகிகள் நேரில் செல்ல வேண்டும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நிர்வாகிகளின் நடவடிக்கைகளைத் தொகுத்துக் கட்சித் தலைமைக்கு வழங்க வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தை விரைவில் முடித்தே ஆக வேண்டும்” என்று விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட பிறகு, முதல் முறையாக பூத் கமிட்டி நியமனத்தில் விஜய் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இது வரவிருக்கும் தேர்தல்களுக்கு கட்சி தன்னைத் தீவிரமாகத் தயார்படுத்தி வருகிறது என்பதைக் காட்டுகிறது. பூத் கமிட்டி நியமனப் பணிகளை விரைவுபடுத்துவதன் மூலம், கள அளவில் கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.