திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPI) 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் முன்னிலையில் கையெழுத்தானது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இந்த முறை ஒரு தொகுதி குறைக்கப்பட்டு 5 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், “இந்த தேர்தலில் சிபிஐயின் முதல் குறிக்கோள், பாஜக மற்றும் அதன் கூட்டணியை வீழ்த்துவது தான். அதற்கான பெரும் போரை முதல்வர் ஸ்டாலின் தொடங்கியுள்ளார். இந்தக் கட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். சிபிஐ எப்போதும் மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்து வரும் கட்சி.
மற்றொருபுறம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான (CPM) பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியிலேயே நீடிக்கிறது. நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, திமுக தரப்பில் குறைந்த அளவிலான தொகுதிகளே முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனை ஏற்க மறுத்த சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம், கடந்த முறை ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளை விட இந்த முறை கூடுதல் தொகுதிகளைப் பெறுவதில் தங்கள் கட்சி உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். “கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதைக் காரணம் காட்டி, எங்களது எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது” என அவர் வெளிப்படையாகவே அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.
திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), மனித நேய மக்கள் கட்சி _ (2) உதயசூரியன் சின்னத்தில் போட்டி, காங்கிரஸ் (28+1), மதிமுக – ( 4 ) (3 தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – (2) உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
இதுவரையும் திமுக கூட்டணியில் 43 தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 7 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது.
இருப்பினும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களுக்கு உடன்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதே எண்ணிக்கையை ஏற்குமா அல்லது கூடுதல் இடங்களுக்காகத் தனது பிடிவாதத்தைத் தொடருமா என்பது அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் தெரியவரும். தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள இந்தச் சிறு சிறு முரண்பாடுகளை விரைவில் களைந்து, ஓரிரு நாட்களில் முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிட திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
