தமிழ்நாட்டில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
வாக்களிக்க தகுதியானவர்களை பட்டியலில் சேர்ப்பதற்கும், இறந்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கும், ஒன்றிற்கு மேற்பட்ட முகவரியில் வாக்களிக்கும் போலி வாக்காளர்களை களைவதற்கும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறுகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் இன்று தொடங்கி டிசம்பர் 4ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் இன்று முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. அதாவது அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்படும் படிவங்களை பொதுமக்கள் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பத்துடன் வழங்க வேண்டும்.
அவ்வாறு பெறப்படும் படிவங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களால் நடத்தப்படுகிறது.
சென்னையில் ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட 16 இடங்களில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி இன்று வழங்கப்படுகிறது. தீவிர திருத்தப் பணிகள் குறித்த சந்தேகங்கள் இருப்பின் சென்னை மாநகராட்சி தேர்தல் அலுவலக தொலைபேசி எண் 044-25619547 எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
