சென்னை பல்லாவரம் அடுத்த பாரதி நகர் துலுக்கானத்தம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஷானா பாத்திமா (29). இவரும் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி (31) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2020 ஆண்டு திருமணம் செய்த இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த சூழலில் முகமது அலி மது குடித்துவிட்டு தினம் தோறும் அவரது மனைவி ஷானா பாத்திமாவிடம் பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்ததால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷானா பாத்திமா கணவனைப் பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கடந்த ஏழு மாதங்களாக தனியாக வாழ்ந்து வரும் ஷானா பாத்திமா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் முகமது அலி அவரது மனைவி மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த 15ஆம் தேதி ஷானா பாத்திமாவின் பெற்றோர்கள் காதணி விழாவிற்காக மதுரை சென்று உள்ளனர். தொடர்ந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஷானா பாத்திமா பணிக்கு செல்லும் போது வீட்டை பூட்டுவதற்கு பூட்டு இல்லாததால் அருகிலுள்ள கடைக்கு சென்று பூட்டு ஒன்றை வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று உள்ளார்.
அப்போது பாத்திமா செல்வதைப் பார்த்த அவரது கணவர் முகமது அலி அவரை வழிமறித்துள்ளார். திடீரென அவரது முகத்தில் கழிவறை கழுவும் ஆசிட்டை வீசியுள்ளார். இதனால் வலியில் துடித்த ஷானா பாத்திமா அங்கிருந்து அழுது கொண்டு ஓடினார். முகமது அலியும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
பின்னர் அப்பகுதியில் இருந்தவர்கள் ஷானா பாத்திமாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆசிட் பட்டதால் அவருக்கு இடது கண்ணில் பார்வை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஷானா பாத்திமா பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் முகமது அலியையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
