மிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழ்மட்ட வளிமண்டல பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று முதல் 23-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

24-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 25 மற்றும் 26-ம் தேதிகளிலும் மாநிலத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று முதல் 24-ம் தேதி வரை உள் தமிழகத்தின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 24-ம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version