தமிழ்த் திரைப்படத் துறையில் நிலவி வந்த நெருக்கடியான சூழலுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக, உள்ளூர் பஞ்சாயத்து வரியை 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகக் குறைத்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஃபெப்சி – FEFSI) தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஃபெப்சி விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்த் திரைப்படத் துறையைக் காப்பாற்றும் முயற்சியாக வரிச்சுமையைப் பாதியாகக் குறைத்த தமிழக அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரிக்குறைப்பு, தமிழ்த் திரைப்படத் துறைக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்றும், படத் தயாரிப்புச் செலவுகளைக் குறைத்து, திரைப்படங்களை உருவாக்கவும், திரையிடவும் வழிவகுக்கும் என்றும் ஃபெப்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.