தமிழகச் சட்டப்பேரவையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் முன்வைத்த காரசாரமான விமர்சனங்களைத் தொடர்ந்து, முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரதன் பண்டிட் நியமிக்கப்பட்ட உத்தரவைத் தமிழ்நாடு அரசு அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது.
முன்னதாக, முதலமைச்சர் விஜய்யின் ‘ராஜகுரு’ மற்றும் ஆஸ்தான ஜோதிடராகப் பார்க்கப்படும் ஒருவருக்கு அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டதற்குத் தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. “மக்களாட்சியில் ஜோதிடருக்கு என்ன வேலை?” என பிரேமலதா விஜயகாந்த் சபையில் கேள்வி எழுப்பிய நிலையில், தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் கூட்டணிக் கட்சிகளும் இந்த நியமனத்திற்குத் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தின.
பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த அழுத்தங்கள் மற்றும் விமர்சனங்களுக்குப் பணிந்த முதலமைச்சர் விஜய், ரதன் பண்டிட்டின் நியமன உத்தரவை வாபஸ் பெற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆட்சியின் தொடக்கத்திலேயே எழுந்த இந்தச் சிக்கலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
