தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். “மாற்றம் (CHANGE) என்று கூறிவிட்டு, திரைமறைவில் பரிமாற்றம் (EXCHANGE) செய்து கொண்டிருக்கிறீர்கள்” எனச் சாடிய அவர், ஆட்சியைத் தக்கவைக்க கூவத்தூரை மிஞ்சும் அளவிற்கு அவலங்கள் நடப்பதாகவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பாணியில் ஆட்சி நடத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதிமுக-வின் ஒரு தரப்பு ஆதரவு குறித்துப் பேசிய உதயநிதி, “அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், ஒரு தரப்பினர் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். அதன் பிறகு தான் பெரிய ட்விஸ்ட் நடக்கிறது. அந்தப் பிரிவில் இருப்பவர் வீட்டிற்குப் புதிய சோஃபா செல்கிறது, பின்னாடியே புதிய முதலமைச்சரும் போகிறார். இதெல்லாம் பார்க்கும்போது புஷ்பா பட பாணியில் ‘சோஃபா’ ஆட்சி நடைபெறுவது போலத் தெரிகிறது” என சாடினார்.
“65% மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி”:
தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின், தவெக அரசுக்கு மக்களிடம் உண்மையான பெரும்பான்மை இல்லை என வாதிட்டார். தமிழகத்தில் பதிவான 4.93 கோடி வாக்குகளில் 1.72 கோடி வாக்குகளை மட்டுமே ஆளுங்கட்சி பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள 3.21 கோடி மக்கள் (சுமார் 65%) இந்த ஆட்சியை நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “தோல்வி பயத்தால் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், இதுவரை வாக்களித்த மக்களுக்கு நன்றி கூட சொல்லவில்லை. திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால்தான் தவெக இன்று ஆட்சியில் அமர்ந்துள்ளது” என அவர் சுட்டிக்காட்டினார்.
வாக்குறுதிகள் மற்றும் வெளிநடப்பு:
தவெக அளித்த கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் குறித்துப் பேசிய அவர், பெண்களுக்கு அறிவித்த ரூ.2,500-ஐ உடனடியாக வழங்க வேண்டும். ஆண்டுக்கு 6 சிலிண்டர், குழந்தைகளுக்குத் தங்க மோதிரம், பெண்களுக்குப் பட்டுப்புடவை, வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை போன்ற நீண்ட பட்டியலை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
“தற்போது தமிழகத்தின் கடன் பற்றிப் பேசி மக்களை நீண்ட காலம் காக்க வைக்காதீர்கள்” எனக் கூறிய உதயநிதி, 106 உறுப்பினர்களை மட்டுமே வைத்துக்கொண்டு குதிரை பேரம் மூலம் எம்.எல்.ஏ-க்களைக் கடன் வாங்கி அரசு நடத்துவதாகக் குற்றம்சாட்டினார். இந்த நியாயமற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை எனத் தெரிவித்து, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
