ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதாகக் கூறி, ரூ.8.50 லட்சம் பெற்று திரும்ப வழங்காதவர் காரில் கடத்தி தாக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டையைச் சேர்ந்தவர் தர்மராஜ் (31). சென்னை திருமங்கலம், அவ்வை தெருவில் வாஷிங் மெஷின் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 5-ம் தேதி மாலை, கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு கார் ஒன்று வந்தது. அதிலிருந்து இறங்கிய 7 பேர் கும்பல் தர்மராஜை தாக்கி காரில் கடத்தியது. கோவளம் பகுதிக்கு கடத்திச் சென்று அங்கு வைத்தும் அவரை தாக்கியது.
மறுநாள் (6-ம் தேதி) அவரை மீண்டும் அந்த கும்பல் திருமங்கலம் அழைத்து வந்து கொண்டிருந்த போது, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அக்கரை சிக்னல் அருகே தர்மராஜ் காப்பாற்றும்படி திடீரென கூச்சலிட்டார்.
காரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தர்மராஜ் மீட்கப்பட்டார். அவர்கள் அனைவரும் நீலாங்கரை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தர்மராஜ் கடத்தப்பட்ட இடம் திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், அந்த நிலைய போலீஸாரிடம் அனைவரும் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டது பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ஸ்ரீஜி (30), ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (36), வேணுகோபால் (30), வானகரத்தைச் சேர்ந்த யுவராஜ் (36), மணப்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் (25) என்பது தெரிந்தது.
இந்த 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்டு, தர்மராஜை கடத்தி தாக்கியுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை தர்மராஜ் தொடர்ந்து மறுத்து வருகிறார். எனவே இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீஸார் தெரிவித்தனர்.
