சென்னையில் கடந்த சில நாட்களாக சரிவைக் கண்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் சரிவு காணப்பட்டு வந்த நிலையில், இன்று ஏப்ரல் 14 (சித்திரை 1 – தமிழ்ப் புத்தாண்டு) இன்று விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. ஆபரணத் தங்கம் விலையில் இன்று கிராமுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,760-க்கு விற்பனையாகிறது.
நேற்று ஒரு கிராம் ரூ.14,060-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,480-க்கும் விற்பனையான நிலையில், இன்றைய விலை உயர்வு நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் இன்று கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது. இன்று ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.5,000 அதிகரித்து, மொத்தம் ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனையாகி வருகிறது. உலகளாவிய பொருளாதார சூழல்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. கடந்த வாரம் முழுவதும் விலை குறைந்து வந்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை உயர்வு குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
