இந்தியாவிலேயே முதல் முறையாக, 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இந்தியாவில் பெண்களைப் பாதிக்கும் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக இந்த கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பாதிப்புடன் இருக்கக்கூடிய, 1.27 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். மேலும் ஏறக்குறைய 79,000 பெண்கள் இந்த நோயால் தங்கள் உயிரை இழக்கின்றனர்.
மற்ற பல புற்றுநோய்களைப் போலல்லாமல், இதை பெரும்பாலும் தடுக்க முடியும். நவீன மருத்துவமானது எச்.பி.வி தடுப்பூசி, வழக்கமான பரிசோதனைகள் மற்றும் ஆரம்பகால விழிப்புணர்வு போன்ற சக்திவாய்ந்த வழிமுறைகளை கொண்டுள்ளது. இவற்றின் மூலம் இந்த நோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியும். தடுப்பூசியை சரியான நேரத்தில் செலுத்திக்கொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை தடுக்க முடியும்.
இந்தநிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 14 வயது பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி போடும் திட்டத்தை, முதற்கட்டமாக அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இதில் தமிழ்நாட்டில் 14 வயதுக்குட்பட்ட 3,38,649 பெண்களுக்கு முன்கூட்டியே அரசின் சார்பில் இலவசமாக HPV தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்த ஊசியை இருமுறை செலுத்த ரூ.28,000 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
