மயிலாடுதுறை அருகே உள்ள கடலங்குடி கிராமத்தில், 100 வயதைத் தொட்ட அம்பிகை என்ற பாட்டி, தனது எள்ளுப் பேத்தி உள்ளிட்ட 44 வாரிசுகள் சூழ கேக் வெட்டிப் பிறந்தநாளைக் கொண்டாடிய நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது

மாரிமுத்து என்பவரின் மனைவியான அம்பிகை பாட்டிக்கு இன்றுடன் 100 வயது நிறைவடைகிறது. இதைக் குடும்பத்தினர் ஒரு திருவிழாவைப் போலக் கொண்டாடத் திட்டமிட்டனர். இதற்காகப் பாட்டியின் 3 மகன்கள், 3 மகள்கள், 17 பேரன்-பேத்திகள், 20 கொள்ளுப் பேரன்-பேத்திகள் மற்றும் ஒரு எள்ளுப் பேத்தி என ஒட்டுமொத்தமாக 44 சொந்தங்களும் ஒரே இடத்தில் திரண்டனர்.

பாட்டியின் நீண்ட ஆயுளுக்காகக் குடும்பத்தினர் முறைப்படி ‘ஆயுள் விருத்தி ஹோமம்’ நடத்திச் சிறப்பு வழிபாடுகளைச் செய்தனர். அதனைத் தொடர்ந்து, 100-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் பாட்டி அம்பிகை கேக் வெட்டினார். சூழ்ந்திருந்த வாரிசுகள் அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு பாட்டிக்குக் கேக் ஊட்டி, அவரிடம் காலில் விழுந்து ஆசி பெற்றனர். அப்போது பாட்டி, பழைய பாடல்களைப் பாடி அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

பாட்டியின் இந்த அசாத்திய சுறுசுறுப்பு குறித்து அவரது பேரன்கள் கூறுகையில், “எங்கள் பாட்டிக்கு நூறு வயதானாலும் இன்றும் தனக்குத் தேவையான மதிய உணவைத் தானே சமைத்துக் கொள்கிறார். தினமும் தவறாமல் செய்தித்தாள்களைப் படிக்கிறார். சிறுதானியங்கள் மற்றும் இயற்கை சார்ந்த பாரம்பரிய உணவு முறைகளை அவர் தொடர்ந்து பின்பற்றி வருவதுதான், இந்த வயதிலும் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக நடமாட முடிகிறது” எனப் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

விழாவின் நிறைவாக 44 பேரும் பாட்டியுடன் இணைந்து ஒட்டுமொத்தக் குடும்பப் புகைப்படம் மற்றும் செல்ஃபிக்களை எடுத்துத் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறையினர் இப்படி ஒரே இடத்தில் கூடிப் பாசத்தைப் பகிர்ந்து கொண்டதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் நெகிழ்ச்சியோடு பார்த்துச் சென்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version