கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மூலக்காடு பழங்குடியின கிராமத்தில், மூன்று குட்டிகள் உட்பட ஏழு காட்டு யானைகள் முகாமிட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கோடை காலத்தின் வறட்சியால், உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியிலிருந்து யானைகள் விளைநிலங்களுக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், நேற்று ஒற்றை யானை கிராமத்திலுள்ள பொதுத் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்த நிலையில், இன்று அதே இடத்திற்கு மூன்று குட்டிகளுடன் ஏழு யானைகள் கொண்ட கூட்டம் வந்துள்ளது.
கிராமத்தின் எல்லைப் பகுதியில் முகாமிட்டுள்ள இந்த யானைகள், தங்களது குட்டிகளைப் பாதுகாப்பாக நடுவில் வைத்துக்கொண்டு தண்ணீர் தேடி உலா வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குட்டிகளுடன் இருக்கும் யானைகள் எளிதில் ஆக்ரோஷமடையக்கூடும் என்பதால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள், வனத்துறையினர் உடனடியாகத் தலையிட்டு யானைக் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டு, தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
