பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பிற பகுதிகளில் மாடுகளை வெட்ட தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் செல்வபுரத்தைச் சேர்ந்த சூர்யபிரசாந்த் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவை செல்வபுரம் பகுதியில் மாடுகள் வெட்டுவதற்காக  தகர கொட்டகைகல் அமைக்கப்பட்டிருந்தன; இதுதொடர்பாக புகார் அளித்ததை தொடர்ந்து, செல்வபுரம் போலீசார் அந்த இடத்துக்கு வந்து 7 மாடுகளை மீட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகைக்காக துடியலூர் சந்தை, ரத்தினபுரி மசூதி, உக்கடம், செல்வபுரம், கள்ளமேடு, குனியமுத்தூர், கோட்டைமேடு, போதனூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பொது இடங்களில் மாடுகள் வெட்டப்பட உள்ளதாகவும்,

அதைத்தடுத்து மாடுகளை மீட்டு, கோசலைகளுக்கு அனுப்பிவைக்கும்படி செல்வபுரம் போலீசாருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால்,

புகாரை பரிசீலித்து பொது இடங்களில் மாடுகள் வெட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்ககும்படி உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் அமர்வு, கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, பொது இடங்களில் மாடுகளை வெட்டுவதற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது;

1976ஆம் ஆண்டு பசு வதையை தடை செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது; நகர்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மாடுகளை வெட்ட வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது என்பதால், அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பிற பகுதிகளில் மாடுகளை வெட்டக் கூடாது என்றும்,

பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படவில்லை என்பதை தமிழக அரசின் தலைமை செயலாளரும், டிஜிபி-யும் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version