வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய கோட்டக்குப்பம் துணை காவல் கண்காணிப்பாளரை (DSP) பணியிடை நீக்கம் செய்யுமாறு காவல்துறை இயக்குநருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியில் உள்ள 5.16 ஹெக்டேர் நிலம் தொடர்பாக ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த செந்தாமரைக்கும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவருக்கும் இடையே நீண்ட காலமாகப் பிரச்சனை இருந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், அந்த நிலம் செந்தாமரைக்கே சொந்தமானது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்நிலையில், வேறு சமூகத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் அதே நிலத்துக்கு உரிமை கோரி திண்டிவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும், செந்தாமரை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
2023ஆம் ஆண்டு வானூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில், 2024ஆம் ஆண்டு நிலத்தைப் பார்வையிடச் சென்ற செந்தாமரையின் உறவினரை கேசவன் சாதியைச் சொல்லி திட்டி, கடுமையாகத் தாக்கி, செல்போனைப் பறித்துள்ளார்.
இதையடுத்து, சாதி ரீதியாகத் திட்டியதாக அளிக்கப்பட்ட புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, கேசவன் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மீது 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செந்தாமரையின் மனு:
தங்களை சாதி ரீதியாகத் திட்டி, மிரட்டல் விடுத்த கேசவன் மீது அளிக்கப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து, குற்ற இறுதி அறிக்கை (Charge Sheet) தாக்கல் செய்யுமாறு கோட்டக்குப்பம் சரக துணை காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என செந்தாமரை தனது மனுவில் கோரியிருந்தார்.
நீதிமன்ற விசாரணை:
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தே. அசோக் குமார், காவல் துணை கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தவில்லை என்றும், ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறார் என்றும் வாதிட்டார்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, உரிய நடவடிக்கை எடுக்காத மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாத காவல் துணை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்து, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.