தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் விழுப்புரத்தில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய அவர், அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். இவர் அதைவிட ஒரு படி மேலே போய் உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என்கிறார். ஆமாம் நயன்தாரா வேண்டும். முதல்வர் நிறைவேற்றுவாரா? நயன்தாராவை திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்பார்கள் முதல்வர் நிறைவேற்றுவாரா? என்று பேசினார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
அந்தவகையில், பெண்களை முழுமையாக அவமதிக்கும் ஒரு அருவருப்பான ஆணாதிக்க மொழி வன்முறை என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சர்ச்சை பேச்சுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இதேபோல், சிவி சண்முகத்தின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.
இந்தநிலையில், அதிமுக எம்பி சிவி சண்முகம் நயன்தாரா தொடர்பான பேச்சிற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டது. அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். முற்றிலும் தவறுதலாகவே வார்த்தை பயன்படுத்தப்பட்டது. எந்தவிதமான உள்நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
