கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் சட்டத்துக்கு புறம்பான கட்டிடங்கள் கட்டுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்த சாமுவேல் பிளஸ்வின் லாய், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்,”கன்னியாகுமரி நகரில் உள்ளூர் திட்டக்குழுமம், கடலோர கட்டுப்பாட்டு மண்டலம், உயர கட்டுப்பாட்டு விதிகளை மீறி ஏராளமான கட்டிடங்கள், தனியார் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. ஆனல் கடலோர கட்டுப்பாட்டு மண்டலம் விதிகளை மீறி கன்னியாகுமரி நகரில், 100-க்கும் மேற்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களுக்கு சீல் வைத்து அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும்” என கடந்த 2019 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார் .
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்திருந்தபோது உயர் நீதிமன்றம் விதிமீறல் செய்யப்பட்ட அனைத்து விடுதிகளை தரப்பினராக சேர்க்க உத்தரவிட்டிருந்ததுடன் தமிழ்நாடு அரசின் நகர்ப்புற ஊரமைப்பு துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் நீதிபதி மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணை செய்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் உயர் நீதிமன்றம் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக பார்க்கிறது. கடற்கரை பகுதியில் இது போன்று சட்டத்துக்கு புறம்பான கட்டிடங்கள் கட்டுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் எனவே இது தொடர்பான தற்போதைய நிலை அறிக்கையையும் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்பு துறை தாக்கல் செய்த நிலை அறிக்கையின் தற்போதைய நிலையையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டவுடன் இரண்டு வாரங்கள் ஒத்திவைத்தார்.