வைர நகைக்கடை, தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
சென்னை தியாகராயநகர், பசுல்லா சாலையில் உள்ள பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்று ரசாயனங்கள், நிலக்கரி மற்றும் சாம்பல் கையாளுதல், உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இதன் தொழிற்சாலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சாலையில் உள்ள அலுவலகம், தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள தலைமை அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வருமான வரி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், எவ்வளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்பன போன்ற விவரங்கள் சோதனை முடிவடைந்த பின்னர் வெளியிடப்படும்’ என்றனர்.
