தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரச்சாரங்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு குறித்துப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, தவெக தலைவர் விஜய்க்கு முறையான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அக்கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெரம்பூரில் இருந்து கொளத்தூர் நோக்கிச் சென்ற விஜய்யின் வாகனத்திற்குத் போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் போதிய காவலர்கள் பாதுகாப்பு இல்லை என தவெக குற்றம்சாட்டியுள்ளது. “அனுமதி பெற்றும் பாதுகாப்பு வழங்காதது ஜனநாயக விரோதம்” என அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும், கூட்ட நெரிசல் காரணமாக வில்லிவாக்கத்தில் திட்டமிடப்பட்ட பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, திமுக தொண்டர்கள் திருவண்ணாமலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரும் கூட்டத்திற்கு மத்தியில் தடையின்றிப் பிரச்சாரம் செய்ததைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், தவெக ஆதரவாளர்களோ இருவரின் பிரச்சார வாகனங்களுக்கு முன்னால் நிற்கும் போலீசாரின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். “ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஒரு நீதியா?” எனத் தவெகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தப் பாதுகாப்பு பாரபட்சம் குறித்துச் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்தே தேர்தல் ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version