திண்டுக்கல் மாவட்டத்தில் 98பட்டி தாய் கிராமமான மேட்டுப்பட்டியில் அமைந்துள்ளது காளியம்மன், பகவதியம்மன் கோயில். ஆண்டுதோறும் இக்கோயிலில் வைகாசி திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுகான 381-வது வைகாசி திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
15 நாட்கள் விமரிசையாக நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூக்குழி இறங்கும் நிகழ்வு இன்று (21.05.2025) காலை தொடங்கியது. இதில் காப்பு கட்டிய பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கையில் குழந்தைகளோடும், காளியம்மன், பகவதி அம்மன் மற்றும் கருப்பணசாமி ஆகிய சாமிகளின் வேடமணிந்து சுமார் 200-க்கும் மேற்பட்டொர் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தலைவர் ஊர் நாட்டாமை அழகர்சாமி தலைமையில், துணை தலைவர் அரசு ஒப்பந்ததாரர் மேட்டுப்பட்டி முருகன், செயலாளர் கைலாசம், பொருளாளர் முருகன், இணை பொருளாளர் வினோத் குமார், ஊர் சேர்வை முருகேசன் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர். மேலும் 23ம் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் 24ம் தேதி தெப்ப உற்சவத்துடன் வைகாசி திருவிழா நிறைவடைகிறது.