கரூர் மாவட்ட கோயில் நிலங்களின் பத்திரப் பதிவு தடையை நீக்கிய உத்தரவுக்கு எதிரான வழக்கில், சம்பந்தப்பட்ட நிலங்கள் தற்போது யார் பெயரில் உள்ளன, அவற்றின் மொத்த மதிப்பு என்ன உள்ளிட்ட முழு விவரங்களையும் தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்களுக்கு சொந்தமான 3,084.95 ஏக்கர் நிலங்களின் பதிவுத் துறை தடையை, மாவட்ட ஆட்சியர் நீக்கியதை எதிர்த்து சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தரப்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வில், மனுதாரர் தரப்பில் ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் தடையை நீக்கியதாக வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலங்களில் வசித்து வந்தவர்களின் கோரிக்கையின் அடிப்படையிலும், ரயத்துவாரி பட்டா உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலித்த பிறகும் தடை நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கோயில் நிலங்கள் தற்போது யார் பெயரில் உள்ளன, அவற்றின் மொத்த மதிப்பு உள்ளிட்ட விரிவான பதில் அறிக்கையை ஜூலை 29-க்குள் தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
