நாட்டின் நீதித்துறை அமைப்பு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழுகின்றன, ஆனால் இந்த முறை உச்ச நீதிமன்றமே இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது. கரூர் நெரிசல் வழக்கின் விசாரணையின் போது, சென்னை உயர் நீதிமன்ற வழக்குப் பட்டியல் மற்றும் விசாரணை செயல்முறைகளில் “ஏதோ தவறு” இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலின் அறிக்கையைப் பெற்ற பிறகு உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்தது, இது ஏராளமான நடைமுறை குழப்பங்களையும் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தியது.
கரூர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு எதிராக த.வெ.க. தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, சென்னை உயர் நீதிமன்றம் எவ்வாறு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது?” என்று கேள்வி எழுப்பியது. இதன் மூலம், கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை நடைமுறைகளில் தவறுகள் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், தமிழக அரசு சார்பில், நெரிசலை விசாரிக்க அமைக்கப்பட்ட தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. எதிர்காலத்தில் கூட்டங்கள் நடத்த விதிமுறைகள் வகுக்கவும், நிவாரணம் பரிந்துரைக்கவுமே இந்த ஆணையம் அமைக்கப்பட்டது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் கோரிக்கையை உடனடியாக ஏற்கவில்லை. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதன் பின்னரே இது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறி, வழக்கை ஒத்திவைத்தது
