கொடைக்கானலில் நடைபெற்ற 25வது நாய்கள் கண்காட்சி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சியுடன் கூடிய கோடை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுற்றுலாத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து நடத்திய 25-வது நாய்கள் கண்காட்சி நேற்று பூங்கா வளாகத்தில் மிக உற்சாகமாக நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் சைபீரியன் ஹஸ்க்கி, கோல்டன் ரெட்ரீவர், டாபர்மேன், அமெரிக்கன் புல்லி, மினியேச்சர், பாக்சர், சிட்சூ, லசாப்சோ, கான் கார்ஸோ, ஜெர்மன் ஷெப்பர்ட் மற்றும் நம்முடைய பாரம்பரிய ராஜபாளையம் வகை நாய்கள் என மொத்தம் 15 ரகங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.


நாய்களின் குணாதிசயங்கள், உரிமையாளரின் கட்டளைக்குக் கீழ்ப்படிதல், ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 5 சுற்றுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு நாய் ரகமும் தத்தமது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்த, பூங்காவிற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
போட்டியின் உச்சகட்டமாக, 5 வயதான ‘டாபர்மேன்’ இனத்தைச் சேர்ந்த ‘பாகுபலி பாபு’ என்ற நாய் செய்த சாகசங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. வளையத்திற்குள் குதிப்பது, உயரம் தாண்டுவது உள்ளிட்ட வீரதீர செயல்களைச் செய்து அசத்திய அந்த நாய், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற நாய்களுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர். மே 31-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த கோடை விழாவில், நாய்கள் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும் நிகழ்வாக அமைந்தது.
