நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பிதிர்காடு வனச்சரகம், கொட்டாடு பாட்டவயல் வெள்ளேரி பகுதியில், கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சிறுத்தை ஒன்று கம்பி வேலியில் சிக்கித் தவிப்பதாக நேற்று (ஜூலை 8) இரவு வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், கூடலூர் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் தலைமையிலான குழுவினர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தின் உதவி வன கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்ட வனப்பணியாளர்கள், மிகுந்த கவனத்துடன் அதனைப் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட சிறுத்தைக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுத்தையின் உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 9) காலை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உதகை வனக்கோட்ட வனப்பகுதிக்குள் அந்தச் சிறுத்தை பாதுகாப்பாகத் திறந்துவிடப்பட்டது.
