சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், 2015-ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர், இந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றத்திலும், பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் அரசு சிறப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜராகி வாதிட்டார். சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியதற்கான முழு கட்டணம் மற்றும் செலவுத் தொகை வழங்கப்படாததால், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, உரிய கட்டணத்தை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, வழக்கறிஞருக்கான ஆஜர் கட்டணம் வழங்கப்பட்டுவிட்டதாகவும், போக்குவரத்து செலவை வழங்க இயலாது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மிகவும் முக்கியமான இந்த வழக்கில், வழக்கறிஞர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து 117 முறை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அந்த போக்குவரத்து செலவையும் அவரே ஏற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும், ஆஜர் கட்டணம் மற்றும் போக்குவரத்து செலவுகளை சேர்த்து ரூ.12.10 லட்சம் கோரி சமர்ப்பிக்கப்பட்ட தொகையை வழங்காமல், அதற்கு பதிலாக மேல்முறையீடு செய்து அரசின் நேரம், சக்தி மற்றும் மக்கள் பணத்தை செலவிடுவது தேவையற்றது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இறுதியாக, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்த அமர்வு, சிறப்பு அரசு வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு வழங்க வேண்டிய கட்டண பாக்கி மற்றும் போக்குவரத்து செலவுகளை நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version