மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுக்குழு கூட்டம், கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அ. அர்ஜுனராஜ் தலைமையில், சென்னை அண்ணாநகர் நியூ ஆவடி சாலையில் உள்ள விஜயஸ்ரீ மஹாலில் இன்று நடைபெற்றது.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மாநில அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு மத்தியில் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் (SPA) இடம்பெற்றிருந்த பல கட்சிகள், தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) உள்ளிட்ட முன்னாள் கூட்டணிக் கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால், சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பெரும்பான்மையை உறுதி செய்தது.
கடந்த ஜூன் 20-ஆம் தேதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர முடியாது என்று அறிவித்தது.
இடதுசாரி கட்சிகளும் கூட்டணியில் தொடரமுடியாது எனத் தெரிவித்து விட்டது.
இந்த நிலையில் அண்மைக்கால நடவடிக்கையைத் தொடர்ந்து மதிமுகவும் திமுகவில் இருந்து வெளியேறப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, மதிமுக பொதுக் குழுவில் இது தொடர்பாக முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் இன்று நடைபெற்ற பொதுக்குழுக்கூட்டத்தில் முதல் ட் தீர்மானமே திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திமுக கூட்டணியில் இருந்து மதிமுகவும் விலகிய நிலையில், தவெகவுடன் தனது கூட்டணியைத் தொடரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..
