கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட வாளையார், வேலந்தாவளம் மற்றும் வீரப்பனூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் அமைச்சர் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். குறிப்பாக, தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி, கனிம வளங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவை உரிய அனுமதியின்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கு கடத்தப்படுவதைத் தடுப்பதில் காவலர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக மதுபானங்கள் மற்றும் இதர பொருட்கள் கொண்டு வரப்படுவதையும், மருத்துவக் கழிவுகள் அத்துமீறி தமிழக எல்லைக்குள் கொட்டப்படுவதையும் முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
