டந்த ஐந்து ஆண்டுகளில் பத்திரப்பதிவுத் துறையில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றதாகவும், “மினிஸ்டர் கட்டிங்” என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பான குற்றம்சாட்டைத் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், முந்தைய ஆட்சியில் இரவு 9 மணி, 10 மணி வரை பத்திரப்பதிவு பணிகள் நடைபெற்றதாகவும், ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் “மினிஸ்டர் கட்டிங்” என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும்  முன்னாள் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தியைக் குறிப்பிட்டு குற்றம் சாட்டினார்.

ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து பதிவு செய்யப்பட்டாலும் ரூ.20 ஆயிரம் வரை லஞ்சம் பெறப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு பத்திரப்பதிவுத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், புறம்போக்கு நிலங்கள், ஏரி நிலங்கள் மற்றும் கோயில் நிலங்களின் சட்டவிரோத பதிவுகளைத் தடுக்க அதிகாரிகளுக்கு தொடர்ந்து உத்தரவுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் போலி பத்திர மோசடிகள் தொடர்பாக பொதுமக்கள் தகவல் அளித்தால், சம்பந்தப்பட்ட பதிவுகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைபெற்ற போலி பத்திரப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகளையும் கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version