தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 18 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த, இயற்கை ளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வரப்பெற்றன. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி அங்குள்ள 54 கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உதவி ஆட்சியர்கள் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு, 09.05.2026 முதல் இந்த ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்தநிலையில், இன்று (25.05.2026) அதிகாலை தென்காசி மாவட்டத்தில் அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அவரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற முதற்கட்ட புலத்தணிக்கையில், மொத்தம் ஆய்வு செய்யப்பட்ட 54 கல்குவாரிகளில் 18 கல்குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, அந்த 18 கல்குவாரிகளின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 3 குழுக்களின் விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
