முல்லைப் பெரியாற்றில் 2000 கன அடிக்கு மேல் நீர் செல்வதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று தேனி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நேற்று ஒரே நாளில் இரண்டு அடி உயர்ந்து தற்போது 135 அடியை எட்டிய நிலையில் தமிழக பகுதிகளுக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 1867 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தற்போது முல்லைப் பெரியாற்றிலிருந்து 2000 கன அடிக்கும் மேல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக முல்லைப் பெரியாற்றில் இரண்டு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டு வைகை அணைக்கு சென்று கொண்டிருக்கிறது.

அதிக அளவில் நீர் சென்று கொண்டிருப்பதால் முல்லைப் பெரியாற்றில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என தேனி மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

தேனி அருகே வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் நீரானது ஆர்ப்பரித்துக் கொண்டு செல்வதால் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றுப் பகுதிக்கு செல்லாமல் இருக்க நுழைவுவாயில் மூடப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் நீராடி விட்டு கோயிலுக்கு செல்வது வழக்கம். தற்போது அதிக அளவில் நீர் செல்வதால் பக்தர்கள் ஆற்றில் இறங்காமல் இருப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்…

Share.
Leave A Reply

Exit mobile version